தக்காளிக்கு வந்த வாழ்வு! விவசாயிகள் மகிழ்ச்சி, பொதுமக்கள் கவலை.


சென்னை வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கியுள்ளது. அபரிமிதமாக கொட்டித்தீர்த்த மழையால் விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. காய்கறிகள் முற்றிலும் அழுகத் தொடங்கியுள்ளன. சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைவாக உள்ளதால் விலைவாசி உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில மாதங்கள் வரை தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக தக்காளி கிலோ 140 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. தொண்டாமுத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் 14 கிலோ எடையுள்ள டிப்பர் தக்காளி நேற்று முன்தினம் 950 ரூபாய்க்கும், நேற்று 1,200 ரூபாய்க்கு விற்பனையானது. மழை குறைந்தாலும் தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும். அதுவரை விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தக்காளி மட்டுமல்லாது வெண்டைக்காய், புடலங்காய், கத்தரி, பீட்ரூட் என பல காய்கறிகளும் 80 ரூபாய்க்கு மேல் விற்பனையாகின்றன. முன்பெல்லாம் சந்தைக்கு 500 ரூபாய் கொண்டு சென்றால் ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வந்த நிலையில் தற்போது 2 நாட்களுக்குத் தேவையான காய்கறிகளை மட்டுமே வாங்க முடிவதாக பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்

காய்கறிகள், தக்காளி விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் பொதுமக்களுக்கு சிரமத்தை கொடுத்துள்ளது.எனவே விலைவாசியை குறைக்க காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.
Picture : zyd_bin_Ak

Post a Comment

0 Comments