போதை வேண்டாமே அந்த பாதை!






 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல் மற்றும் மனதை செம்மையாக வைத்து வாழ்வதே நல்வாழ்க்கையின் பயன். பணத்தை இழந்தால் சம்பாதிக்க முடியும். உடல் நலத்தை இழந்தால் அவ்வளவுதான். போதை வஸ்துக்கள் உடல் நலத்தையும் அதனால் ஏற்படும் நஷ்டத்தையும் தனிமனிதனுக்கு மட்டுமின்றி வீட்டிற்கும் நாட்டிற்கும் தருகிறது. பல ஆண்டுகளாக நாட்டில் நோய்களும், தற்கொலைகளும், போதை மருந்துகளின் நடமாட்டத்தால் அதிகரித்திருப்பது கவலை தரும் விஷயம். அந்தளவுக்கு எங்கு பார்த்தாலும் அரசு டாஸ்மாக் மது விற்பனை நடக்கிறது.

அரசுக்கு டாஸ்மாக் வருமானத்தை விட மனமில்லை.போதைக்கு அடிமையாவது குறித்து ஒவ்வொருவரும் வேறு வேறு காரணங்களை காட்டுகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பாமரர்கள் அவர்கள் பகுதியில் குறைந்த விலையில் கிடைக்கும் மட்ட ரக போதைப் பொருட்களை சிறு வயதில் நட்பு வட்டாரத்தின் மூலம் பழகி பின்பு அதற்கு நிரந்தர அடிமையாகின்றனர். படித்த, மேல்மட்டத்தினர் தகுதிக்கு ஏற்றவாறு அதிக விலையுள்ள போதை பொருட்களை உபயோகிக்கின்றனர்.இந்தியாவில் 2 சதவீத மாணவர்கள் நிரந்தர போதை அடிமைகள் என உலக சுகாதார அறிக்கை கூறுகிறது. தடுப்பு மற்றும் ஒழிப்பு- உலகின் போதை மருந்து விற்பனையாளர்களின் நெட் ஒர்க் 76 நாடுகளில் பரந்துள்ளது. சாதாரண ரிக் ஷாக்கரன் முதல் புகழ்பெற்ற நடிகர், நடிகை, தொழிலதிபர், ஏன் நாட்டின் அதிபர்கள், அரசியல்வாதிகளும் இந்த வியாபாரத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் ெவளியாகின்றன. இதில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. சீனா, துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அதிக போதைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வழியாக அமொரிக்காவிற்கும், வங்கதேசம், சிங்கப்பூர், ஸ்பெயின், பிரான்ஸ் வழியாக இங்கிலாந்து நாட்டிற்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றனபுகையிலை மற்றும் மதுபானங்களால் ஏற்படும் தாக்கம் அதிகம். 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மதுவினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 1992--2012 ஆண்டுகளில் 55 சதவீதம் பேர் மதுப் பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். இந்த சதவீதம் இன்னும் கூடிக்கொண்டு இருக்கிறது. ஒருவர் இந்தியாவில் சராசரியாக ஒரு ஆண்டில் 33 லிட்டர் மதுபானம் அருந்துகிறார். ஆந்திராவில் 34.5 லிட்டராகவும், கேரளாவில் 36 லிட்டராகவும் மதுபான உபயோகம் உள்ளது. ஆண்டுதோறும் 25 லட்சம் பேர் இறக்கின்றனர். மது அருந்துவதால் 60 வித வியாதிகள் வருகின்றன. 20- முதல் 50 சதவீதம் குடிகாரர்கள் மஞ்சள் காமாலை, வலிப்பு, விபத்து மற்றும் புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

அரசின் கஞ்சா இன்றும் இந்திய அரசு உ.பி. காசிப்பூர், மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களில் கஞ்சா தொழிற்சாலைகளை நடத்துகிறது. 25 ஆயிரம் எக்டேரில் கஞ்சா பயிரிடப்பட்டு அபின் தயாரிக்கப்பட்டு ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது. அரசு விலை கிலோவிற்கு ரூ.1500 தான். ஆனால் கள்ள மார்க்கெட்டில் கிலோ ரூ.50,000 ஆகும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.432 கோடி வருவாய் கிடைக்கிறது.இந்தியாவில் ஹெராயின் போதைக்கு 34 லட்சம் பேர் அடிமையாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சராசரியாக தினமும் 7 பேர் இறக்கிறார்கள். ஆண்டுதோறும் பல ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 2004ல் 2000 பேர், 2005ல் 2500 பேர், 2009-ல் 3000 பேர், 2013-ல் 5000 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் 401 உள்ளன. அதில் சராசரியாக 8500 நோயாளிகள் உள்ளனர். 10 கோடி கிலோ ஹெராயின் இதுவரை பிடிபட்டுள்ளது. பிடிபடாத ஹெராயின் மருந்து அளவு பல கோடி கி.ட்டமா திட்டமா ஆபத்தான மருந்துகள் சட்டம், விஷ மருந்துகள் சட்டம், போதைப்பொருட்கள் சட்டம், மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் போன்றவை இருந்தாலும் அவை கடுமையாக பின்பற்றப்படவில்லை. குறைந்த அளவு அபராதம், சிறைத்தண்டனை மட்டுமல்லாமல், அதிகாரிகளும், சாட்சிகளும் எளிமையாக வளைக்கப்படுவதால், இச்சட்டங்கள் நீர்த்துப் போகின்றன. பன்னாட்டு வியாபாரிகளும், பயங்கரவாத அமைப்புகளும் திட்டம் போட்டு கைகோர்த்து செயல்படுவதால் குறைந்த அளவு :போதை மருந்துகளே பிடிபடுகிறது. பெரும் அளவு கள்ளச்சந்தையில் மாயமாகி விடுகின்றன.

சீனா, அரபு நாடுகள், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இச்சட்டம் கடுமையான விதிகள் மற்றும் தண்டனைகளை உள்ளடக்கி போதை மருந்துகளை ஒழிப்பதில் முன்னிலையில் உள்ளன. கடுமையான சட்டங்கள் மட்டும் போதாது. திறமையான திட்டங்களும் உடனே தேவை.தன் ஒழுக்கம் தேவை- சமூகத்தில் பிரபலமானவர்கள் செய்யும் செயல் மற்றும் சினிமா, 'டிவி' பிரபலங்கள் மூலம் தரும் விளம்பரங்களைப் பார்த்தும் கேட்டும் இளையதலைமுறையினர் இதுதான் வாழ்க்கை முறை என நினைத்து திசை மாறிப் போகிறார்கள். பெண்களில் பலர் மது மற்றும் சிகரெட் புகைப்பதன் மூலம் தாங்கள் சமூகத்தில் ஆண்களுக்கு சமமானவர்கள் என்று நினைப்பதும், மேலும் இது தங்களுக்கான அதிகாரம் என்று நினைப்பதும் இன்று சாதாரணமாகிவிட்டது. விளம்பரம் வேறு, சமூக வாழ்க்கை முறை வேறு என்பதை இளையதலைமுறை நன்கு சிந்தித்து போதையின் பாதையில் செல்லாமல் கட்டுப்பாடான வாழ்வைப் பேண வேண்டும்.தன் ஒழுக்கம் மேன்மையைத் தருவதால் அதுவே உயிரினும் சிறந்ததாகப் போற்றப்படுகிறது என்பதை வள்ளுவர்,'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்'என்கிறார்.

பள்ளி, கல்லுாரிகளில் முன்பு இருந்து வந்த நன்னெறி வகுப்புகள் இன்று மறைந்து பிறருக்கு தெரியாமல் ரகசியமாகக் கெட்டுப் போகும் வாய்ப்புகளை கல்வி நிறுவனங்களும் பெற்றோர்களுமே தருவதால் விளக்கை நாடும் விட்டில் பூச்சிகளாய் ஆசையில் மோசம் போய் விடுகின்றனர். புற்று நோய், இதய நோய், பால்வினை நோய் போன்றவைகளுக்கு போதை வஸ்துக்களே காரணம். தீயொழுக்கம் தனி மனிதனுக்கு மட்டுமல்ல அது சமுதாயம் முழுமைக்கும் என்றும் துன்பம் தருவதாகும். பொருள், காலம், உடல் விரயம் செய்து மனம் காணும் சுகம் எத்தனை நாளோ?







Post a Comment

0 Comments