சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் ஒரு வாரம் முழு ஊரடங்கு ?அமல்படுத்த அதிகாரிகள் பரிந்துரை!


சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கும்படி அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இதுகுறித்து, அரசு பரிசீலித்து வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. ஆனால், சென்னையில் பாதிப்பு குறைவதாக இல்லை. தினமும், 1,000த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னையை ஒட்டிய, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், தொற்று பரவல் அதிகமாக உள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அரசின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை; ஊரடங்கு என்பது பெயரளவுக்கே உள்ளது.கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. பல இடங்களில், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
கடைகளுக்கு செல்வோரில், பெரும்பாலானோர் முகக் கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. இது நோய் பரவல் அதிகரிப்பதற்கு, முக்கிய காரணம். சென்னையில், பாதிப்பு உள்ளவரை மட்டுமே, பரிசோதனைக்கு அழைத்து செல்கின்றனர். குடும்பத்தினர், அவரை சுற்றி உள்ளோரையும் அழைத்து சென்று, பரிசோதனைக்கு உட்படுத்துவது இல்லை.
அவர்கள் வழக்கம் போல் வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவரின் வீட்டில், 'நோட்டீஸ்' ஒட்டப்படுகிறது; வேறு தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படுவது இல்லை. மக்களும் ஒத்துழைக்காததால், கொரோனா பாதிப்பு அடங்க மறுக்கிறது. எனவே, நோய் பரவலை தடுக்க சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதுபற்றி, அரசு பரிசீலித்து வருவதால், முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அளவில் சென்னையில்தான் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments