சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் பறிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.


உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகம்: கோப்புப்படம்
 பக்தர்களிடம் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பணம் பறிக்கும் செயலில் பூஜாரிகள் ஈடுபட கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.கல்யாணசுந்தரம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.250, ரூ.150, ரூ.100 கட்டண தரிசன முறை அமலில் உள்ளது. இந்த கட்டண டிக்கெட் வாங்கும் பக்தர்கள் சுவாமியை அருகே நின்று தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
கோயிலுக்கு சம்பந்தம் இல்லாத பலர் கோயில் முன்பகுதியில் நின்று கொண்டு பக்தர்களை சாமி அருகே அழைத்துச் செல்வதாக கூறி டிக்கெட் வாங்காமல் கோயிலுக்குள் அழைத்துச் செல்கின்றனர். அதே நேரத்தில் அவர்களிடம் டிக்கெட்டுக்குரிய கட்டணத்தை வசூலித்துக்கொள்கின்றனர்.
இப்பணத்தை கோயில் நிர்வாகத்திடம் செலுத்துவதில்லை. இவ்வாறு கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன.எனவே, திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்த தனி குழு அமைக்கவும், கோயிலுக்கு சம்பந்தம் இல்லாத அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் வசூலிக்க தடை விதித்தும், கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கவும், கோயிலில் அறநிலையத் துறை ஊழியர்கள் பதிவுக்கு பயோ மெட்ரிக் பதிவு கருவியை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி  அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிய தீர்ப்பின் விவரம்:
“கோயிலில் சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்ட பூஜாரிகளால் மட்டுமே பூஜைகள் செய்யப்படுகின்றன என்பதை இந்து அறநிலையத் துறை ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் உறுதிப்படுத்த வேண்டும்.
அனைத்து பக்தர்களையும் ஏழை பாகுபாடின்றி ஒரேவிதமாக நடத்த வேண்டும். கோயில் ஊழியர்கள் மற்றும் பூஜாரிகள் வருகைக்காக பயோமெட்ரிக் வருகை பதிவு கருவியை செயல்படுத்த வேண்டும்.
பக்தர்களிடம் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பணம் பறிக்கும் செயலில் பூஜாரிகள் ஈடுபடகூடாது. இதுகுறித்து இந்து அறநிலையத் துறை இணை ஆணையர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
சட்டப்பூர்வாமாக நியமிக்கப்படாத பூஜாரிகள் குறித்த விழிப்புணர்வு போர்டுகள் வைக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து இந்து அறநிலைய துறை ஆணையர் மற்றும் கோவில் ஆணையர் ஜூலை 5 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.
HASHIM
STATEXPRESS
statexpress256@gmail.com
Whatsapp Number : 99449 10541

Post a Comment

0 Comments