நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடக்கம்: சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 18-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கிறது என மத்திய அரச அறிவித்துள்ளது.
முத்தலாக் மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளதால், இந்த கூட்டத்தொடரில் அதை நிறைவேற்ற மத்தியஅரசு முனைப்பு காட்டக்கூடும்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடந்தது. ஆனால், அந்த அமர்வில் காவிரி விவகாரம் குறித்து அதிகமு எம்.பி.க்களும், ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி தெலங்குதேசம், விவசாயிகள் பிரச்சினை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரு அமர்வுகளும் முறையாக நடத்த முடியாமல் வீணானது. பட்ஜெட் அறிக்கை கூட விவாதமின்றி மக்களையில் நிறைவேற்றப்பட்டது. அந்தஅளவுக்கு எம்.பி.க்கள் கடும் அமளியிலும், கூச்சலிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திட்டமிட்ட பட்டியலின்படி எந்தவிதமான முக்கிய மசோதாக்களையும் நிறைவேற்ற முடியாமல் போனது.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடத்து குறித்து இன்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று கூடி விவாதித்தது. அதில், மழைக்காலக் கூட்டத்தொடரை ஜுலை 18-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை, 18 நாட்கள் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு பின், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அனந்த் குமார்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடத்துவது குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று கூடி விவாதித்தது. அதில் மழைக் காலக் கூட்டத்தொடரை ஜுலை 18-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதிவரை 18 நாட்கள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடரை மிகவும் சுமூகமான முறையில் நடத்துவதற்கு அனைத்து கட்சிகளிடம் இருந்து மத்திய அரசு ஆதரவையும், ஒத்துழைப்பையும் கேட்கிறது. பல்வேறு முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன, அவற்றை மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்து நிறைவேற்ற அரசு விரும்புகிறது. ஏறக்குறைய 6 அவசரச்சட்டங்கள் விவாதத்துக்கு எடுக்கப்பட உள்ளன.
வரலாற்றுச்சிறப்பு மிக்க முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறிவிட்டது, ஆனால், மாநிலங்களவையில் நிறைவேறாமல் இருக்கிறது, இதை நிறைவேற்ற அரசு அதிக முன்னுரிமை கொடுக்கும். மேலும், ஓபிசி ஆணையத்துக்குச் சட்ட அந்தஸ்து வழங்குதல், தேசியமருத்துவக் கல்வி ஆணைய மசோதா, திருநங்கைகளுக்கு அதிகாரமளித்தல் மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் விவாதத்துக்கு எடுக்கப்படும்.
இதில் மாநிலங்களவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் இந்த மாதத்தோடு ஓய்வு பெறுகிறார். ஆதலால்,அடுத்த துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடத்தப்பட உள்ளது
இவ்வாறு அனந்த் குமார் தெரிவித்தார்.
இதற்கிடையே காஷ்மீரில் கதுவாவில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்புவார்கள். ஆதலால், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப் போன்றே மழைக்காலக் கூட்டத்தொடரும் அனல்பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
HASHIM
STATEXPRESS
statexpress256@gmail.com
Whatsapp Number : 99449 10541

Post a Comment

0 Comments