தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக 4 நாட்களுக்கு முன்பே கேரளாவில் தொடங்கும் என்று ஸ்கைமெட் எனும் தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை என்பது கேரளா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, ஒடிசா தமிழகம் ஆகிய பகுதிகளில் ஜூன் 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மழை பெய்யும் காலமாகும்.
வழக்கமாக தென்மேற்குப் பருவமழை என்பது ஜூன் முதல் தேதி அல்லது அடுத்த சில நாட்களில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே மே 28-ம் தேதியே பருவமழை தொடங்க உள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வரும் 20-ம் தேதி பருவமழை தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கும் முன்பாக தென்மேற்குப் பருவமழை தொடங்கும் விதமாக அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:
''தென்மேற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு ந்லை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக வலுப்பெறக்கூடும். எனவே மீனவர்கள் யாரும் தென் அரபிக் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், வட மற்றும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தற்போதுள்ள அக்னியின் தாக்கத்தால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது.
உள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் நிலவி வருகிறது. கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கடலில் அலைகள் ஆறரை அடி வரை உயரும். ஆகவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குச் செல்ல வேண்டும்.
அந்தமான் மற்றும் கேரள கடல் பரப்பில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படும் என்பதால் அந்தமான், கேரளப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.''
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
0 Comments