போரூரில் சினிமா துணை நடிகைக்கு கதாநாயகி வாய்ப்பு தருவதாகக் கூறிஅவரை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்த 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர்கள் பேசிய செல்போன் பதிவுகளை வைத்து ஆராய்ந்து வருகின்றனர்.
சென்னை போரூர் சத்தியா நகரைச் சேர்ந்தவர் கவிதா (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார், சிறிய வேடங்களில் நடித்துவரும் இவர் கதாநாயகி வாய்ப்புக்காக அலைந்து திரிந்து வாய்ப்பு கேட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் கவிதாவிடம் சினிமா வாய்ப்பு தேடுவது குறித்து விசாரித்துள்ளார். 'எனக்கு உங்களை நன்றாகத் தெரியும்' என்று கூறிய அவர் தனது நண்பர் ஒரு புதுப்படம் தயாரிப்பதாக கூறி அவரிடம் சொல்லி வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு சம்மதித்த கவிதா எங்கு வரவேண்டும் என்று கேட்டுள்ளார். ’போரூர் சிக்னல் அருகில் வந்துவிடுங்கள். அங்கிருந்து காரில் அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறிய குமார் போனை துண்டித்துள்ளார். சொன்னபடி இரவு போரூர் சிக்னல் அருகே கவிதா காத்திருக்க அங்கு காரில் வந்த நபர் அவரை காரில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்.
கார் நேராக குன்றத்தூர் தரைப்பாலம் அருகில் ஒரு வீட்டுக்குச் சென்றது. அங்கு மேலும் இருவர் இருந்தனர். சினிமா தயாரிப்பாளர் போல் தெரியவில்லையே என்று கவிதா தயங்க கத்திமுனையில் உள்ளே இழுத்துச்சென்ற அவர்கள் மூன்று பேரும் அவரிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர்.
மூவரும் பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்துள்ளனர். பின்னர் கவிதாவிடமிருந்த செல்போன், நகை பணம் முதலியவற்றை பிடுங்கிக்கொண்டு, 'நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம், வீடியோவை வலைதளத்தில் வெளியிட்டுவிடுவோம்' என்று மிரட்டிவிட்டுச் சென்றனர்.
இது குறித்து கவிதா குன்றத்தூர் போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கவிதாவிடம் பேசிய குமார் என்பவர் செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்யவும் தீர்மானித்துள்ளனர்.
குமார் என்பவர் சிக்கினால் மற்ற இருவரும் எளிதாக பிடிபடுவார்கள் என்பதால் அவரைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கவிதாவின் செல்போனையும் அவர்கள் எடுத்துச்சென்றுள்ளதால் செல்போனை டிராக் செய்யும் முயற்சியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கவிதா அளித்த புகார் உண்மையானது தானா என்பதை அறிய அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பவும் கவிதா குமாருடன் பேசியது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக போரூர், முகலிவாக்கம் பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
0 Comments