பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து நேற்று சொந்த ஊருக்கு மக்கள் அதிகளவில் புறப்பட்டுச் சென்றனர். இதனால் அரசு பஸ் மற்றும் ரயில்களிலும் 2 நாட்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட நேற்று காலை முதலே மக்கள் ஆர்வமாக புறப்பட்டுச் சென்றனர். பஸ் தொழிலாளர்களின் 8 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால், மக்கள் அரசு பஸ்களை நம்பி அதிகளவில் வரத் தொடங்கினர். பண்டிகை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், சென்னையில் இருந்து நேற்று மக்கள் குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றனர். கார் உள்ளிட்ட சொந்த வாகனங்கள் மூலமும் புறப்பட்டுச் சென்றனர். இதனால், மாலை 5 மணிக்குப் பிறகு அண்ணா சாலை, ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர்.
பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சென்னையில் இருந்து நேற்று 2,275 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 4,255 பஸ்கள் இயக்கப்பட்டன. மக்கள் கூட்டம் வர வர, கோயம்பேடு, அண்ணாநகர், பூவிருந்தவல்லி, தாம்பரம் சானடோரியம், சின்னமலை (சைதாப்பேட்டை) ஆகிய 5 இடங்களில் இருந்து தேவைக்கு ஏற்றவாறு பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன.
அமைச்சர் நேரில் ஆய்வு
கோயம்பேடு பஸ் நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று இரவு ஆய்வு செய்தார். பஸ்களை கவனமாக ஓட்டிச் செல்ல வேண்டுமென ஓட்டுநர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், சிறப்புப் பேருந்துகள் இயக்கம், பயணிகளுக்கான வசதிகள் குறித்து அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
ரயில் படிகளில் பயணம்
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் வழக்கமான ரயில்கள், சிறப்பு ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம்பிடிக்க மக்கள் நீண்ட தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் படிகளில் அமர்ந்தபடியே பயணம் செய்தனர். கடைசி நேரத்தில் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத மக்கள் ஆம்னி, அரசுப் பேருந்துகளில் பயணம் செய்தனர்.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட மக்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு வசதியாக கோயம்பேடு உட்பட 5 இடங்களில் இருந்து கடந்த 2 நாட்களாக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறோம். நேற்று மட்டுமே மொத்தம் 4,200-க்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. தொழிலாளர்கள் போராட்டத்தால் தயங்கி இருந்த மக்கள் நேற்று காலை முதலே பயணம் செய்யத் தொடங்கிவிட்டனர். இதுவரையில் சுமார் 1.5 லட்சம் பேர் அரசு பஸ்கள் மூலம் சொந்த ஊருக்குப் பயணம் செய்துள்ளனர்.
4,657 பஸ்கள் இயக்கம்
இதற்கிடையே, மக்கள், குறிப்பாக, வட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இன்று அதிக அளவில் புறப்பட்டுச் செல்வார்கள். எனவே, இன்று 2,382 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 4,657 பஸ்கள் இயக்கப்படும். இதில், கோயம்பேடு – 3,418, பூந்தமல்லி – 560, தாம்பரம் சானடோரியம் – 240, சின்னமலை (சைதாப்பேட்டை) – 199, அண்ணாநகர் – 240 என பிரித்து இயக்கப்படும். மேலும், டிக்கெட் முன்பதிவு செய்ய கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 சிறப்பு கவுன்ட்டர்கள் நேற்று திறக்கப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக அனைத்து ரயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அறிவிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களில் அனைத்திலும் முன்பதிவு முடிந்தது. அனைத்து இடங்களும் நிரம்பின. இதுவரை, எழும்பூரில் இருந்து மட்டுமே சுமார் ஒரு லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்’’ என்றார்.
ஆம்னி பஸ்கள் அதிகரிப்பு
சென்னையில் வழக்கமாக சுமார் 1000 ஆம்னி பஸ்கள் இயக்கப்படும். பஸ் தொழிலாளர்களின் போராட்டம் நேற்று முன்தினம் வரையில் நீடித்ததால், வெளியூரில் இருந்து அதிக ஆம்னி பஸ்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, 1,700-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இதனால், ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
0 Comments